எழுத்தின் அளவு: அ+ அ- அ
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி, வரும் 9-ஆம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலகத் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பாஜக எம்.பி.க்கள், முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது.
இதனிடையே, மத்திய அமைச்சரவை மற்றும் மக்களவையில் முக்கிய இலாகாக்களை ஒதுக்கீடு செய்யுமாறு கூட்டணி கட்சிகள் பாஜக தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதுதொடர்பாக பாஜக சார்பில் கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாளை மறுநாள் பிரதமர் மோடி பதவியேற்க திட்டமிட்ட நிலையில், கூட்டணி கட்சிகள் உடனான பேச்சுவார்த்தை முழுமையடையாததால் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா வரும் 9ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நேபாளம், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பாஜக எம்.பி.க்கள், முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.