எழுத்தின் அளவு: அ+ அ- அ
சி.பி.எஸ்.இ பாடப் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு டேட்டிங் மற்றும் எதிர் பாலினத்தவர் உடனான நட்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தனி பாடப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பெரும்பாலும் வரவேற்பை பெற்றுள்ள இந்த முடிவு குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
சி.பி.எஸ்.இ ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வேல்யூ எஜுகேஷன் என்கிற பாடப்பிரிவில் டேட்டிங் அண்ட் ரிலேஷன்ஷிப் என்கிற பாடப்பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. பதின் பருவங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், எதிர் பால் இனத்தவர் மீது ஏற்படும் ஈர்ப்பு, டேட்டிங் மற்றும் எதிர் பாலினத்தவரின் உடனான நட்பு மற்றும் ரிலேஷன்ஷிப் தொடர்பான அறிவுரைகள் தொடர்பாக இந்த பாடப்பிரிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நவீன காலத்தில் பதின் பருவத்தினர் இடையே ஏற்படும் காதல் மற்றும் இணைய நட்பு, இணையதள காதல், இணையதள சீண்டல்கள் உள்ளிட்டவற்றை விளக்கமாக மாணவர்களுக்கு புரியும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அது மட்டுமின்றி மாணவ, மாணவிகள் இடையே ஏற்படும் நட்பினை எவ்வாறு கண்ணியமாக கையாள்வது, இணையதள காதல் எவ்வாறு நிலையற்றது என்பது குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதற்கு இணையதளத்தில் பெருவாரியானோர் வரவேற்பை அளித்துள்ளனர்.
மேலும் சரியாக பதின் பருவம் தொடங்கக்கூடிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.
மேலும் இது மாதிரியான விஷயங்களை மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்துரையாட இயலாத சமூகத்தில் நாம் இருக்கின்ற நிலையில், மாணவ, மாணவிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் எனவும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, உலகிலேயே மிகப்பெரிய டேட்டிங் இணையதளமான டின்டர், இந்தப் பாடப் பகுதி சேர்க்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளி பயிலும் பதின் வயது மாணவ, மாணவிகளிடையே டேட்டிங் குறித்த சரியான புரிதலையும், காதல், இணையதள நட்பு உள்ளிட்டவைகள் குறித்த அச்சத்தை பெற்றோர்களிடம் இருந்து நீக்கவும் இது போன்ற நடவடிக்கைகள் உதவும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.