எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியாவில் 3 பேருக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதித்து வரும் HMPV எனப்படும் 'ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ்” பாதிப்பானது, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 3 பேருக்கு HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் 3 மாதம் மற்றும் 8 மாத குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுவாச பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநில சுகாதாரத்துறை, HMPV வைரஸ் பாதிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதன்படி, காய்ச்சல், தும்மல், இருமல் இருந்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், HMPV பாதிப்பு இருப்பது போல் உணர்ந்தால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், வீட்டிலே சுய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவர்களை ஆலோசிப்பது பாதிப்பை கட்டுப்படுத்த உதவும் என தெரிவித்துள்ள குஜராத் சுகாதாரத்துறை இதனால் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.