"ஹிஸ்புல்லாவை ஒழித்துக்கட்டும் வரை தாக்குதலை நிறுத்த முடியாது" - இஸ்ரேல் பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தை வான்வழித்தாக்குதல் மூலம் இஸ்ரேல் ராணுவம் அழித்துள்ளது. ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில், இஸ்ரேலில் அமைதி திரும்பும் வரை ஓயமாட்டோம் என அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றிய சில மணி நேரங்களில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஈரான் ஆதரவு அமைப்பான லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த வாரங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் ராணுவம் அதிரடித்தது. இந்நிலையில் லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தை வான்வழித் தாக்குதல் மூலம் இஸ்ரேல் ராணுவம் அழித்துள்ளது. அப்போது பெய்ரூட்டின் பல பகுதிகளில் இஸ்ரேல் வீசிய குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் ஏராளமான அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாகின.

தாக்குதலின் பாதிப்பு சுமார் 30 கிலோ மீட்டா் வரை எதிரொலித்ததாக ஹிஸ்புல்லாக்களின் ஆதரவு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. தாக்குதலில் இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில், இஸ்ரேலில் அமைதி திரும்பும் வரை ஓயமாட்டோம் என அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றிய சில மணி நேரங்களில் இந்த பயங்கர தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும் பெய்ரூட்டில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லாக்களின் தலைமையகம் தகா்க்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 11 மாதங்களாக தாக்குதல் நடத்தி வந்த ஹிஸ்புல்லா அமைப்பு மீது, தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் கடந்த ஒரு வாரத்தில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழெந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day