எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திருப்பமாக போட்டியில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக பைடனையே வேட்பாளராக ஜனநாயக கட்சி அறிவித்தது. ஆனால் வயது முதிர்வு காரணமாக அதிபர் பைடனின் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாகின. மேலும்
ட்ரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்தின் போதும் தடுமாறினார். இதனால் அதிருப்தி அடைந்த சொந்தக் கட்சியினரே, போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கினர்.
ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்து வந்த ஜோ பைடன், திடீரென தற்போது போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அமெரிக்க அதிபராக பணியாற்றுவது தனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் எனக் கூறியுள்ளார். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தனது நோக்கம் என்றாலும் தேர்தலில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். எஞ்சி உள்ள பதவிக்காலத்தில் கவனம் செலுத்துவேன் என்றும் இது ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் சார்ந்து எடுத்துள்ள முடிவு எனக் கூறியுள்ளார்.
மீண்டும் அதிபராக ஆதரவு தெரிவித்தவர்களுக்கும், நம்பிக்கை வைத்த அமெரிக்க மக்களுக்கும் மற்றும் இணைந்து பணியாற்றிய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2020-ல் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் துணை அதிபர் வேட்பாளராக, தான் தேர்வு செய்தது கமலா ஹாரிஸைத்தான் எனக் கூறியுள்ள ஜோ பைடன், தற்போது தேர்தலில் இருந்து விலகியுள்ள நிலையில் இம்முறை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அவருக்கு முழு ஆதரவை வழங்க விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.