அமெரிக்கா இனி உலகப்போர்களில் பங்கேற்காது - அதிபர் டிரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்கா இனி உலகப்போர்களில் பங்கேற்காது என அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் 47-வது அதிபராக வெள்ளை மாளிகையில் பதவியேற்றுகொண்ட டொனால்ட் டிரம்ப், அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து உரையாற்றினார். அப்போது அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம் என தெரிவித்த டிரம்ப், அமெரிக்க கொடியிலுள்ள நட்சத்திரங்களை செவ்வாய் கிரகத்தில் பதிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவோம் எனவும் தெரிவித்தார். 

சுதந்திரம் மிக்க பலம் வாய்ந்த மற்றும் நம்பிக்கையான நாட்டை உருவாக்குவதே தனது நோக்கமென கூறிய டிரம்ப், அமெரிக்க ராணுவம் வலிமை பெற்ற ஒன்றாக கட்டமைக்கப்படும் என தெரிவித்தார். இந்த நொடி முதல் அமெரிக்காவில் சுதந்திரம் பிறந்திருந்திருக்கிறது என தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவின் வீழ்ச்சி முடிவுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அமெரிக்க எல்லையையொட்டிய மெக்சிகோ நாட்டில் இருந்து, அமெரிக்காவிற்குள் ஊடுருவிய சட்டவிரோத அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவித்த டிரம்ப், மெக்சிகோ வளைகுடா என்பது இனி அமெரிக்க வளைகுடா என அழைக்கப்படும் என அறிவித்தார். 

தனக்கு முன் அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடனால் எல்லை பாதுகாப்பு பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை என குற்றம்சாட்டிய டிரம்ப், இயற்கை பேரிடர்களை கட்டுப்படுத்த பைடன் அரசு தவறிவிட்டதாக கூறினார். அமெரிக்காவில் மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ் பெறப்படும் என தெரிவித்த டிரம்ப், மக்கள் அனைவரும் அவர்கள் விரும்பிய வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவித்தார். 

அமெரிக்காவில் பேச்சுரிமைக்கான கட்டுப்பாடுகள் அனைத்து நீக்கப்படும் என தெரிவித்தார். சட்டத்திற்கு கட்டுப்படாத குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படும் எனவும் அறிவித்தார்.  

அமெரிக்காவில், இனி ஆண், பெண் என்ற 2 பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார், டொனால்ட் டிரம்ப். அமெரிக்கா இனி உலகப்போர்களில் பங்கேற்காது எனவும், ராணுவத்திற்கு நாட்டை பாதுகாப்பதே இனி கடமையாக இருக்கும் எனவும் அறிவித்தார். பனாமா கால்வாயில் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய டிரம்ப், அதை சீனா நிர்வகிக்க தரவில்லை எனவும், பனாமா கால்வாயை மீட்டெடுக்க போவதாகவும் அறிவித்துள்ளார். 

இதனிடையே உலக நலனுக்காகவே தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து கடவுள் தன்னை காப்பாற்றியதாகவும், டொனால்ட் டிரம்ப் கூறினார். அமெரிக்காவின் எல்லைகளை விரிவாக்குவோம் எனவும், நம்முடைய மக்கள் உலகில் மிகச்சிறந்த குடிமக்கள் ஆவர் என பெருமிதத்துடன் டிரம்ப் பேசினார். உலகத்தில் முடியாதது என்று எதுவுமே இல்லை. இதற்கு நானே சான்று என்று தனது உரையை டிரம்ப் நிறைவு செய்தார்.

Night
Day