எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் லேசான காயத்துடன் ட்ரம்ப் உயிர்தப்பிய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சிறப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட உள்ள டொனால்டு ட்ரம்ப், பென்சில்வேனியா பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த மர்மநபர் ஒருவர் ட்ரம்ப்பை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் ட்ரம்பின் காது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர், கீழே குனிந்து தன்னை தற்காத்துக் கொண்டார். இதையடுத்து அவரை சூழ்ந்த பாதுகாவலர்கள் ரத்தம் சொட்ட சொட்ட இருந்த ட்ரம்பை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தேர்தல் பரப்புரையின் போது முன்னாள் அதிபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை கண்டு அங்கிருந்த ஆதரவாளர்களும், பொதுமக்களும் அலறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், சிறப்பு பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இத்தாக்குதலில் ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த முன்னாள் அதிபர் ட்ரம்ப், தற்போது நலமாக உள்ளதாகவும், அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ரகசிய சேவை பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடத்தப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், இதுபோன்ற சம்பவத்திற்கு அமெரிக்காவில் இனி இடம் இல்லை என்றும், இந்த சம்பவத்திற்கு எதிராக ஒரே தேசமாக நாம் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நமது ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு முற்றிலும் இடமில்லை என்றும், முன்னாள் அதிபர் டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை என்பதில் நாம் அனைவரும் நிம்மதி அடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.