இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை அமெரிக்காவுடன் இணைந்து வலுப்படுத்துவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இதற்காக வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிகாரிகள் கொடிகளை அசைத்து வரவேற்பு அளித்தனர். இரு தலைவர்களும் ஆரத்தழுவிக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது 2வது முறையாக அமெரிக்க அதிபரானதற்கு டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், பிரதமர் மோடியும் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் முக்கிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். எரிசக்தி, வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா - அமெரிக்கா இடையே கூட்டாண்மை ஜனநாயகம் வலுவடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பைப் பாதுகாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று கூறிய பிரதமர், எரிசக்தி பாதுகாப்புக்கு அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
வரும் 2030க்குள் இரு நாடுகளிடையே 43 லட்சத்து 36 ஆயிரத்து 75 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, 2008ம் ஆண்டு இந்தியாவில் மும்பையில் இனப்படுகொலை செய்த, குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்ததற்காக அதிபர் ட்ரம்புக்கு நன்றி தெரிவித்தார்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி உள்ள இந்தியர்களை திரும்பப் பெற, இந்தியா தயாராக இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர், ஏமாற்றப்பட்டு, பெரிய கனவுகளுடன் இங்கு கொண்டு வரப்பட்டவர்கள். இதனை தடுக்க இந்தியா அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரு நாடுகளிடையே மிகவும் சிறந்த வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டார். இந்தியாவிற்கு ரேடாரால் கண்காணிக்க இயலாத எஃப்-35 நவீன போர் விமானங்களை வழங்க உள்ளதாக அறிவித்த அதிபர் டிரம்ப், அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி, தனது நாட்டுக்காக சிறந்த பணியாற்றி வருவதாகவும், அவருடன் சிறந்த நட்புறவை தாம் கொண்டுள்ளதாகவும், தொடர்ந்து இரு நாட்டு நலன் மற்றும் நட்புறவை பேண இருவரும் இணைந்து செயல்பட இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.