அமெரிக்க அதிபர் தேர்தல் - இன்று மாலை தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளரும் துணை அதிபருமான கமலா ஹாரிசுக்கும், குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை நடைபெறும் இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன்பாகவே பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியும். முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதியை பயன்படுத்தி இதுவரை சுமார் 7 கோடி பேர் வாக்களித்துள்ளனர். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் நேரடியாக வாக்களிக்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். மொத்தம் 50 மாகாணங்களில் உள்ள 538 வாக்காளர் குழு உறுப்பினர்களில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளரே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும். வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு அன்றிரவே வாக்குகள் எண்ணப்படும்.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவேடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்களின் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த மாகாணங்களின் தீர்ப்பின் அடிப்படையில் அமெரிக்காவின் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. 

கமலா ஹாரிஸுக்கு பாடகி டெய்லர் ஷிப்ட், டைட்டானிக் பட ஹீரோ  லியோனார்டோ டி காப்ரியோ, அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர், மார்க் ருபாலோ, ஸ்கேர்லெட் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிரம்புக்கு, உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க், ராக் இசைக்கலைஞர் கிட் ராக். முன்னாள் மல்யுத்த ஐகான் ஹல்க் ஹோகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான கணிப்புகளில் கமலா ஹாரிஸ்- டிரம்ப் இருவருக்கும் இடையிலான வாக்கு சதவீத வித்தியாசம் ஒரு சதவீதமாக உள்ளது. தற்போதைய தேர்தலில் கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுவதால், கடந்த தேர்தலை போன்று இந்த முறையும் அதிபர் தேர்தலில் இழுபறி ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே, தேர்தல் முடிவுகளை இறுதி செய்ய சில நாட்கள் ஆகலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day