அமெரிக்க அதிபர் தேர்தல் - டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை

எழுத்தின் அளவு: அ+ அ-

உலகமே மிகவும் எதிர்பார்த்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 எலக்டோரல் வாக்குகள் தேவைப்படும் நிலையில், 200க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றிமுகம் கண்டுள்ளார். தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், இதற்கான பிரச்சாரத்தில் இரு கட்சியை சார்ந்த தொழிலதிபர்களும், திரைப்பிரபலங்களும் தீவிரமாக ஈடுபட்டனர். 

தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் சிறிய வித்தியாசத்தில் மட்டுமே டிரம்ப்பை, கமலா ஹாரிஸ் முந்திய நிலையில், தற்போது இருவருக்கும் இடையேயான போட்டி மிகவும் கடினமாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த அதிபா் யார் என்பதை முடிவு செய்யும் முக்கிய மாகாணங்களில் டிரம்ப்பின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படும் சூழலிலும், கருத்துக் கணிப்புகளில் இரு வேட்பாளா்களுக்கும் இடையிலான வேறுபாடு போதிய அளவில் இல்லை என்பதால் அவற்றை வைத்து வெற்றியாளரை தீர்மானிக்க முடியாது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளை இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியே தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேசமயம் நகா்ப்புறங்கள், கல்லூரி பட்டதாரிகள் அதிகம் கொண்ட மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இரண்டுக்கும் பொதுவாக உள்ள பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜார்ஜியா, கரோலினா, அரிஸோனா, நவாடா போன்ற மாகாணங்களின் முடிவுகள் இதுவரை யாரும் எதிர்பார்க்காத வகையிலே அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இன்று காலை வரை நடைபெற்றது. அதிபர் தேர்தலில் நேரடியாக வாக்களிக்க முடியாத வகையில், அதற்கு மாறாக தேர்வாளர் குழு எனப்படும் எலக்டோரல் முறையில் மக்கள் வாக்களித்தனர். அதன்படி, இருகட்சியை சேர்ந்த தலா 538 தேர்வாளர் குழுவினருக்கு தங்களது வாக்குகளை மக்கள் செலுத்தினர். இதில் 270 பிரதிநிதிகளின் வாக்குகளை பெறும் கட்சியின் வேட்பாளர், அமெரிக்காவின் அதிபராக முறைப்படி பதவியேற்பார்.

இந்த நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன், உடனடியாக இன்று காலையில் வாக்கு எண்ணும் பணி தொடங்கி, விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், டொனால்ட் டிரம்ப் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறார். குறிப்பாக டென்னஸி, மிசிசிபி, மேற்கு விர்ஜீனியா, அலபாமா, தெற்கு கரோலினா, புளோரிடா உள்ளிட்ட 21 மாகாணங்களில் அவர் வெற்றி பெற்றார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி 538 எலக்டோரல் வாக்குகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். கமலா ஹாரிஸ் 170க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று பின்தங்கி உள்ளார். பெரும்பாலான இடங்களில் டிரம்ப் வெற்றிமுகத்துடன் வலம் வருவதால் அவரே புதிய அதிபராக அரியணை ஏறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தேர்தல் முடிவுகளில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் வரும் ஜனவரி 20 ஆம் தேதி புதிய அதிபராக பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Night
Day