எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்கு இம்ரான் கான் பெரிய தடையாக இருப்பதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம் சாட்டினார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவு தலைவரான நவாஸ் ஷெரீப் தமது கட்சி எம்பிக்களை சந்தித்து பேசினார். அப்போது இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பேசிய நவாஸ் ஷெரீப், அரசியல் பிரச்னைகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான் ஆர்வம் காட்டவில்லை என்றும், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அவர் பெரிய தடையாக
இருப்பதாகவும் தெரிவித்தார். நட்புரீதியாக பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு இம்ரான்கான் தயக்கம் காட்டுவதாக நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவுவதாகவும், 3 மாதத்துக்குள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தை கலைத்து விடுவார் என்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ’மன்சூர் வாஸன்’ தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் தேசிய அரசியலில் அடுத்து வரும் 3 மாதங்கள் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார். ஆளும் கூட்டணி கட்சிகள் இடையே இணக்கமான சூழல் இல்லை என்றும், ஷாபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமரானாலும், நாட்டை சிறப்பாக வழிநடத்த இயலவில்லை எனவும் தெரிவித்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தமது கட்சி ஆலோசிக்கும் என குறிப்பிட்டார். இதுபற்றி தாம் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான்கானுடன் ஆலோசித்ததாக தெரிவித்தார்.