அலுவலக பெண்களிடம் பாலியல் உறவு! எலான் மஸ்க் மீது பகீர் குற்றச்சாட்டு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மற்றும், ‘டெஸ்லா’ நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க், தனது அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களிடம் பாலியல் உறவு வைத்திருந்ததாக பிரபல பத்திரிகையான அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பகீர் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.

தன்னுடைய நிறுவனங்களில் பணிபுரியும் சில பெண் ஊழியர்களுடன் எலான் மஸ்க் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், ஒரு பெண் ஊழியரிடம் தனது குழந்தைகளைப் பெற்றுத் தருமாறு பலமுறை கேட்டுக் கொண்டதாகவும் அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பயிற்சிக்காக வந்த பெண்ணிடமும் பாலியல் உறவு வைத்திருந்தாகவும் எலான் மஸ்க் மீது குற்றம்சாட்டியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய இரு நிறுவனங்களிலும் எலான் மஸ்க் ஒரு வினோதமான மற்றும் ஏற்கத்தகாத கலாசாரத்தை உருவாக்கியுள்ளார். அந்த இரு நிறுவனங்களிலும் பாலியல் ரீதியான நகைச்சுவைகள் சாதாரணமானவை என்றும், ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம் என்றும் அது குறித்து புகார் தெரிவித்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு தனியார்  விமானம் ஒன்றில் பயணம் செய்தபோது, விமானப்பணிப் பெண்ணை மசாஜ் செய்ய கூறியதகவும், மசாஜ் செய்த அந்த பெண்ணை எலான் மஸ்க் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், கூறப்படுகிறது. இது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு அந்த பெண் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்ததையடுத்து, அவரை சமாதானம் செய்ய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில், இந்திய மதிப்பில் இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்கப்பட்டதாகவும், பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேநேரம் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் எலான் மஸ்க் திட்டவட்டமாக மறுத்ததோடு, அந்தப்பெண் கூறுவது உண்மை என்றால் எனது உடலில் உள்ள தழும்புகள், அங்க அடையாளங்கள் பற்றி கூறட்டும் என சவால் விடுத்தார். 

இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எலான் மஸ்க் மீது தொடர்ச்சியாக எழும் நிலையில்,  அலுவலக உறுப்பினர்களுடன் பணிபுரியும் சமயங்களில் எல்.எஸ்.டி, கோகையின், மற்றும் கெட்டமைன் போன்ற போதை பொருட்களை எலான் மஸ்க் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணை எலான் மஸ்க் இரவில் தனது வீட்டிற்கு வருமாறு பலமுறை அழைப்புகள் விடுத்ததாகக் கூறி, இருவருக்கும் இடையிலான உரையாடல் பதிவுகளையும் பகிர்ந்துள்ளார்.

இதனை ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எலான் மஸ்க்கின் வழக்கறிஞர்கள் திட்டவட்டமாக மறுத்தனர். மேலும், அதில் வழங்கப்பட்ட தகவல்கள் "உண்மையற்றவை" என்றும், தவறான கதையை சித்தரிப்பதாகவும் தெரிவித்தனர். 

மேலும் எனக்கு தெரிந்த சிறந்தவர்களில் எலான் மஸ்க் ஒருவர் என்று ஸ்பேஸ் எக்ஸ்-இன் தலைவரும் தலைமை இயக்க அதிகாரியுமான Gwynne Shotwell கூறியுள்ளார். 

அசாத்திய தொழில் நுட்பத்தால் உலகையே புரட்டி போட்ட எலான் மஸ்க் தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் நிலையில் அதனை அவர் மறுத்து வருகிறார். மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், அத்தகைய குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக நடக்கும் சதியா அல்லது உண்மையிலேயே அவர் பெண் ஊழியர்களுக்கு தொந்தரவு அளித்தாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day