அமெரிக்காவில் பிரதமர் மோடியை அடோப் நிறுவன தலைமை அலுவலர் சாந்தனு நாராயண், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட 15 கணினி தொழில்நுட்ப முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் சந்தித்தனர்.
அமெரிக்காவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. இந்நிலையில், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற வட்டமேஜை சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அடோப் நிறுவன தலைமை அலுவலர் சாந்தனு நாராயண், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட 15 கணினி தொழில்நுட்ப முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் சந்திப்பு நடைபெற்றது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர்கள், உயிரி தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து கலந்துரையாடினர். கூட்டத்துக்கு பின்னர் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பு, உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார். புதிய தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாகவும் இந்தியாவுக்கு தொழில்நுட்ப துறையில் நேர்மறை வளர்ச்சியை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.