எழுத்தின் அளவு: அ+ அ- அ
இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு செல்கிறார். இதையொட்டி, இன்று காலை டெல்லியிலிருந்து போலந்து புறப்பட்டார். இதனிடையே, 45 ஆண்டுகளுக்கு முன் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிந்தார். அதன்பின்னர், தற்போது இந்திய பிரதமர் மோடி போலந்து செல்கிறார். இதனை முன்னிட்டு, பிரதமர் மோடியை வரவேற்க தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போலந்து செல்லும் மோடி அங்கு, அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாற்றுகிறார். போலந்து-இந்திய தூதரக உறவுகள் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. போலந்திற்கு 2 நாட்கள் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து அண்டை நாடான உக்ரைனுக்கு ரயிலில் செல்ல உள்ளார். சுமார் 10 மணி நேரம் பயணித்து வரும் 23 ஆம் தேதி உக்ரைன் செல்கிறார். உக்ரைன் தலைநகர் க்வில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்க்கியை சந்தித்து பேசுகிறார். ரஷ்யா- உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு கடந்த ஜூலை மாதம் ரஷ்யா சென்றார். அப்போது, அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார். இந்திய பிரதமர் மோடியின் ரஷ்ய அதிபர் புடின் உடனான சந்திப்பை உக்ரைன் அதிபர் ஜெலனஸ்க்கி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் வரலாற்று பயணமாக உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி. தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் உக்கிரமாக உள்ள நிலையில் பிரதமர் மோடி ரயிலில் உக்ரைன் செல்ல உள்ளார்.