இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாடும், லெபனானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கமும் தொடர்ந்து போரிட்டு வருகின்றன. இஸ்ரேல் பல வழிகளில் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், விரைவில் தரைப்படை வீரர்களை கொண்டு லெபனான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு  பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில்  ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. அவர் பதுங்கியிருந்த தலைமையகம் மீது 80 டன் வெடிகுண்டுகளை வீசி இஸ்ரேல் அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், அங்கு அவருக்கு உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 32 வருடங்களாக ஹிஸ்புல்லாவிற்கு தலைமை தாங்கிய நஸ்ரல்லாவின் மரணத்திற்குப் பிறகு, அந்த அமைப்பை வழிநடத்தக் கூடியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹசன் நஸ்ரல்லா மறைவுக்கு ரஷ்யா, ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

Night
Day