எழுத்தின் அளவு: அ+ அ- அ
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இஸ்ரேல் எந்தவித முன் எச்சரிக்கையுமின்றி நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் உளவுத்துறை தலைமையகம் தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா, அவருடன் இருந்த ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 200 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, லெபனான் மீதான சண்டையை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இஸ்ரேல் எந்தவித முன் எச்சரிக்கையும் விடுக்காமல், வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில், ஹிஸ்புல்லா போராளிகள் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், ஹிஸ்புல்லாவின் உளவுத்துறை தலைமையகம் தகர்க்கப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. அதே சமயம், தெற்கு லெபனான் எல்லையில் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்த, மேலும் பல கிராம மக்களை வீட்டை விட்டு வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, உலகம் இன்று வன்முறையால் துடித்துக்கொண்டிருப்பது கவலை அளிப்பதாகவும், உக்ரைனில் இருந்து சூடான், மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் வறுமை மற்றும் பயத்தை போர் உருவாக்குவதாக ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
அகிம்சையே மனித குலத்திற்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய சக்தி என்றும், ஆயுதங்களை விட சக்திவாய்ந்தது, அகிம்சை என்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் நம்பியதாகவும், அந்த உன்னதமான பார்வையை ஆதரிப்பதற்கு சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் என ஆன்டனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்