எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரான் மீதான இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் மீது ஈரான் கடந்த 14ம் தேதி 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த தாக்குதலில் 99 சதவீத ட்ரோன்களை நடுவானில் இடைமறித்து இஸ்ரேலியப் படைகள் அழித்தன. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல், ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் இன்று ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால் ஈரானின் மேற்கு பகுதியில் வான்வெளி மூடப்பட்டு, ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ஈரான் மீதான இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.