உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்... சாதனை படைப்பாரா ட்ரம்ப்

எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 3வது முறையாக களமிறங்கியுள்ளார். யார் இந்த டொனால்ட் ட்ரம்ப்?  அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் கடந்த வந்த பாதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் கடந்த 1946-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி தொழிலதிபர் பிரட் டிரம்ப், மேரி டிரம்ப் ஆகியோருக்கு 4-வது மகனாக பிறந்தவர் டொனால்ட் ட்ரம்ப். தனது தந்தையிடம் 10 லட்சம் டாலர்கள் கடன் பெற்று, தனியாக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ட்ரம்ப் தொடங்கினார். அதேசமயம், தனது நிறுவனத்தை நடத்திக்கொண்டே, தனது தந்தையின் நிறுவனத்துக்கும் உதவி செய்து, அவரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு உதவி செய்து வந்தார். அதன்பின், கடந்த 1971-ம் ஆண்டு தனது நிறுவனத்தின் பெயரை 'ட்ரம்ப் ஆர்கனைஷேசன்' என மாற்றினார்.

காலங்கள் உருண்டோட அமெரிக்காவில் குறிப்பிடத்தகுந்த தொழில் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வலம் வந்தார். இப்போதும் நியூயார்க் நகரில் டிரம்ப்புக்கு சொந்தமாக டிரம்ப் டவர் ஹோட்டல், ட்ரம்ப் பேலஸ், ட்ரம்ப் வேர்ல்ட் டவர், ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் ஆகியவை மிகவும் பிரபலமாக இருக்கின்றன. மேலும், இந்தியாவில் மும்பை, இஸ்தான்புல், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் ட்ரம்புக்கு நட்சத்திர சொகுசு ஹோட்டல்கள் உள்ளன.

ட்ரம்ப் தனது முதல் இரு மனைவிகளான இவானா, மர்லா ஆகியோரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2005-ம் ஆண்டு மூன்றாவதாக மிலனியாவை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இவாங்கா, எரிக், டிப்பானி, பேரான் ஆகிய 5 பிள்ளைகள் உள்ளனர்.

ஒருகால கட்டத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்பவர்களை கிண்டல் செய்து வந்த ட்ரம்ப், ஒரு கட்டத்தில், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கான போட்டியில் களமிறங்கினார். ஜெப்புஷ் உள்ளிட்ட 17 வேட்பாளர்களைக் தோற்கடித்து முறைப்படி அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்வானார். அதனை தொடர்ந்து குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அவர் அமெரிக்காவின் 45-வது அதிபராக,  கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

பின்னர் மீண்டும் 2021ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் களமிறங்கிய அவரை, ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் தோற்கடித்தார். இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ள அவர், ஜனநாயக கட்சியின் சார்பில் களமிறங்கியுள்ள, அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாளியுமான கமலா ஹாரிஸை வீழ்த்துவாரா என அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், 50 மாகாணங்களில் மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் 270க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை, அதாவது எலக்ட்ரல் வாக்குகளை பெறும் வேட்பாளரே அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில், நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டுள்ளது.

கமலா ஹாரிசுக்கும், ட்ரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், வரும் 6ம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்று தெரிந்து விடும்.

Night
Day