எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார மையத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதற்கான பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015-ல் பாரிஸில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் முதலில் இணைந்த அமெரிக்கா, வளரும் நாடுகளுக்கு ஆதரவாக ஒப்பந்தம் இருப்பதாக விமர்சித்த டிரம்ப், தனது ஆட்சியில், பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடுத்த அமெரிக்க அதிபரான ஜோ பைடன் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையுமென்று அறிவித்திருந்தார். இந்நிலையில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை 2-வது முறையாக விலக்கிக் கொள்வதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், உலக சுகாதார மையத்தில் இருந்தும் வெளியேறுவதாக ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதாவது அமெரிக்காவிடமிருந்து பெரும் நிதியை பெற்றுக் கொண்டபோதிலும், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் உலக சுகாதார நிறுவனம் சரியான முறையில் கையாளவில்லை என்று டிரம்ப் தொடர்ச்சியாக கூறி வந்தார். அதன் அடிப்படையில் தற்போது உலக சுகாதார மையத்திலிருந்தும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.