குறிவைக்கப்படும் அமெரிக்க அதிபர்கள், வேட்பாளர்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டில் அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி  வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் நல்வாய்ப்பாக சிறு காயத்துடன் டிரம்ப் உயிர் தப்பினார். தாக்குதல் நடத்திய 20 வயது இளைஞரை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.

டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரிதாக பேசப்பட்டாலும், அமெரிக்காவை பொறுத்தவரை அந்நாட்டின் அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவங்கள் புதிதல்ல.  அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் மற்றும் பிரதான கட்சியின் அதிபர் வேட்பாளர்கள் மீது கடந்த காலங்களில் 18 முறை தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த கொடூர தாக்குதலில் ஐந்து பேர் மரணமடைந்துள்ளனர்.

1865 ஆம் ஆண்டில் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டார்.  அமெரிக்க உள்நாட்டு போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள போர்ட் தியேட்டரில் நடைபெற்ற நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த அவரை ஜான் வில்கிஸ் பூத் என்பவர் சுட்டுக்கொன்றார்

அமெரிக்காவின் 20வது ஜனாதிபதியான ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட்  1881 ஆம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள பால்டிமோர் மற்றும் பொடோமாக் ரயில் நிலையத்தில் ஜூலை மாதம் சார்லஸ் ஜூலியஸ் கிட்டோ என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். படுகாயமடைந்த ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட் அதே ஆண்ட செப்டம்பர் மாதம் நியூ ஜெர்சியில் உள்ள எல்பெரோனில் உயிரிழந்தார்.

1901 ஆம் ஆண்டு அப்போதைய அதிபரான வில்லியம் மெக்கின்லி, தனது ஆட்சியை விரும்பாத போலந்து அமெரிக்க வம்சாவழியைச் சேர்ந்த லியோன் ஷோல்கோஸ் என்பவரால் சுடப்பட்டார். படுகாயமடைந்த மெக்கின்லி 8 நாட்களுக்கு பின் உயிரிழந்தார்.

1912 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக களமிறங்கிய முன்னாள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிர் தப்பினார். தேர்தல் பிரச்சர பொதுக்கூட்டத்தில் சிக்கொண்டிருந்தபோது, ரூஸ்வெல்ட் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்ற நிலையில் உயிர் பிழைத்தார்.

அதேபோல் 1933 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் உயிர்தப்பினார். அந்த துப்பாக்கி சூட்டில் மேயர் ஆன்டன் செர்மாக் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார்.

1963 ஆம் ஆண்டு அதிபராக இருந்த கென்னடி தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது  டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டாலாஸ் நகரில் லீ ஹார்வே ஆஸ்வேல்டு என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் அப்போது அமெரிக்காவின் மிகவும் வன்முறையான காலகட்டமாக பார்க்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து,  ஜான் கென்னடியின் சகோதரரான ராபர்ட் கென்னடி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹோட்டலில் அவரும் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

1972 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜார்ஜ் வாலஸ் மீது  மேரிலாந்தில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிர் தப்பினாலும், தனது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழிக்கும் நிலைக்கு ஆளானார்.

1975 ஆம் ஆண்டில் அப்போதைய அதிபரான போர்ட் மீது 17 நாட்களில் இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இரண்டு முறையில் பெண்கள் தாக்குதலுக்கு உட்பட்ட அவர், காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

அதேபோல், 1981 ஆம் ஆண்டு வாஷிங்டன்னில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் அப்போதை அதிபர் ரீகன் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் அதிபர் ரீகன் பலத்த காயம் அடைந்தார்.

1994 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையின் மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிபர்  பில் கிளிண்டன் உயிர் தப்பினார். அதேபோல், 2005 ஆண்டு திபிலிசியில் நடைபெற்ற நிகச்சி ஒன்றில் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் ஜார்ஜியாவின் அதிபர் மீதும் வெடிக்காத கைக்குண்டு வீசப்பட்டது. 

அமெரிக்க அதிபராக பதவி வகித்த 46 நபர்களில், 13 பேர் கொலை அல்லது கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த ஒன்பது அதிபர்களில் குறைந்தது ஏழு பேர்  தாக்குதல்கள் அல்லது படுகொலை முயற்சிகளை எதிர்கொண்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day