தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானதால் சுனாமி எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தைவான் தலைநகர் தைபேவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி அலறியடித்து ஓடினர்.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கின. இதனால், பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தால் ஹுவாலியன் நகரில் பல மாடி கட்டடங்கள் சரிந்து விழுந்தன. அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் மீது கட்டிடங்கள் விழுந்தன.

கடுமையான நிலநடுக்கத்தால், தைபேவில் மெட்ரோ ரயில் குலுங்கியது. இதனால், ரயிலில் பயணித்த பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.

தைவானில் பல மாடி கட்டிடங்கள் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து விழுந்ததால், தைவானில்  பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இடிப்பாடுகளில் சிக்கியுள்ள நபர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹுவாலியன் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதவித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. 

தைவான் நாடே மிகச்சிறிய தீவாக இருக்கும் சூழலில், பெரும்பாலான இடங்களில் இருக்கும் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதிலும் ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தைவான் நிலநடுக்கம் எதிரொலியாக, ஜப்பானின் ஒகிராவில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ், தைவான் ஆகிய 3 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Night
Day