தொழிலதிபராக இருந்து அதிபராக உயர்ந்த டிரம்ப் கடந்து வந்த பாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். தொழிலதிபராக இருந்து அதிபராக உயர்ந்துள்ள டிரம்ப், கடந்து வந்த பாதை குறித்து விரிவாக காணலாம்.

நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் கடந்த 1946-ஆம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி தொழிலதிபர் பிரட் டிரம்ப், மேரி டிரம்ப் ஆகியோருக்கு 4-வது மகனாக பிறந்தவர் டொனால்ட் ட்ரம்ப். தனது தந்தையிடம் 10 லட்சம் டாலர்கள் கடன் பெற்று, தனியாக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ட்ரம்ப் தொடங்கினார். அதேசமயம், தனது நிறுவனத்தை நடத்திக்கொண்டே, தனது தந்தையின் நிறுவனத்துக்கும் உதவி செய்து, அவரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு உதவி செய்து வந்தார். அதன்பின், கடந்த 1971-ம் ஆண்டு தனது நிறுவனத்தின் பெயரை 'ட்ரம்ப் ஆர்கனைஷேசன்' என மாற்றினார்.

காலங்கள் உருண்டோட அமெரிக்காவில் குறிப்பிடத் தகுந்த தொழில் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வலம் வந்தார். இப்போதும் நியூயார்க் நகரில் டிரம்ப்புக்கு சொந்தமாக டிரம்ப் டவர் ஹோட்டல், ட்ரம்ப் பேலஸ், ட்ரம்ப் வேர்ல்ட் டவர், ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் ஆகியவை மிகவும் பிரபலமாக இருக்கின்றன. மேலும், இந்தியாவில் மும்பை, இஸ்தான்புல், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் ட்ரம்புக்கு நட்சத்திர சொகுசு ஹோட்டல்கள் உள்ளன.

ட்ரம்ப் தனது முதல் இரு மனைவிகளான இவானா, மர்லா ஆகியோரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2005-ம் ஆண்டு மூன்றாவதாக மிலனியாவை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இவாங்கா, எரிக், டிப்பானி, பேரான் ஆகிய 5 பிள்ளைகள் உள்ளனர்.

ஒருகால கட்டத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்பவர்களை கிண்டல் செய்து வந்த ட்ரம்ப், ஒரு கட்டத்தில், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கான போட்டியில் களமிறங்கினார். ஜெப்புஷ் உள்ளிட்ட 17 வேட்பாளர்களைக் தோற்கடித்து முறைப்படி அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்வானார். அதனை தொடர்ந்து குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அவர் அமெரிக்காவின் 45-வது அதிபராக, கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

பின்னர் மீண்டும் 2021ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் களமிறங்கிய அவரை, ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் தோற்கடித்தார். 

தொடர்ந்த மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயக கட்சியின் சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாளியான கமலா ஹாரிஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

அமெரிக்காவில் புதிதாக தேர்வு செய்யப்படும் அதிபர்கள், ஜனவரி 20ம் தேதிதான் பதவியேற்பது வழக்கம். அதன்படி அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டொனல்டு ட்ரம்ப் பதவியேற்றார். வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் ட்ரம்ப்புக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், சீனா மற்றும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியர்களுக்கு எச்.ஒன்.பி விசாவில் சில சலுகைகள் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பொருளாதாரத்தை அடுத்த 4 ஆண்டுகளில் டொனால்ட் டிரம்ப் வலுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் அமெரிக்க மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Night
Day