எழுத்தின் அளவு: அ+ அ- அ
கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி 165 இடங்களில் வெற்றி பெற்று 4வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப், கனடா மீதான வரியை அதிரடியாக அதிகரித்தார். உள்நாட்டு அரசியல் பிரச்சினை, ட்ரம்ப் வரி விதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் லிபரல் கட்சியை சேர்ந்த ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, லிபரல் கட்சியை சேர்ந்த மார்க் கார்னி கடந்த மாதம் 14-ந் தேதி கனடாவின் 24-வது பிரதமராக பதவியேற்றார். இதையடுத்து கனடா நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னியும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவும் போட்டியிட்டனர்.
343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்தில் ஆளும் லிபரல் கட்சி 165 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 147 இடங்களிலும், இதர 31 இடங்களில் பிற கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 172 இடங்களில் வெற்றிபெற வேண்டும். பிரதமர் மார்க் கார்னி போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஒத்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவுடன் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.