பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புத்தரின் பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்டுள்ள இந்தியா நம்புவது அமைதியையே, போரை அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போலந்து தலைநகர் வார்சாவில் இந்திய வம்சா வளியினரிடையே உரையாற்றிய அவர், எந்த நாட்டில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் முதலில் உதவுவது இந்தியாதான் என்று கூறினார்.

2 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடுகள் பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, தமது பயணத்தின் முதல் கட்டமாக நேற்று போலந்து நாடடிற்கு சென்றார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பின்னர், 45 ஆண்டுகளுக்குப் பிறகு போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் போலந்து தலைநகர் வார்சா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்திய கலையான தாண்டியா நடனத்தை பிரதமர் மோடி கண்டு ரசித்தார். பின்னர் தாண்டியா நடன கலைஞர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் போலந்து வாழ் இந்தியா வம்சாளியை சேர்ந்தவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது ஆர்வமுடன் தம்மை சந்தித்த இந்திய வம்சாவளியினருடன் கைகுலுக்கியும், கையெழுத்திட்டும், செல்ஃபி எடுத்தும் பிரதமர் மோடி மகிழ்ந்தார்.

இதையடுத்து வார்சாவில் உள்ள பிரபல தங்கும் விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அவர்களிடம் கைகுலுக்கி பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைந்தார். 

இதைத் தொடர்ந்து வார்சாவில் உள்ள ஜாம்சாஹிப் மகாராஜ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இரண்டாம் உலக போரின் போது அகதிகளாக வந்த ரஷ்யாவில் இருந்து அழைத்துவரப்பட்ட போலந்து நாட்டு குழந்தைகளுக்கு குஜராத்தில் ஜாம்ஷாஹிப் வம்சத்தைச் சேர்ந்த திக்விஜய்சிங்ஜி, ரஞ்சித்சிங்ஜி ஆகியோர் முகாம்கள் அமைத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் வார்சாவில் உள்ள கோலாபூர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அனைத்து நாடுகளுடனும் சமமான இடைவெளி என்பதே பல ஆண்டுகளாக இந்தியாவின் கொள்கையாக இருந்து வந்ததாகவும், தற்போது அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாக இருப்பதே இந்தியாவின் புதிய கொள்கையாக இருப்பதாகவும் அவர் கூறினார். இரக்க குணம் என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, எந்த நாட்டிலும் எந்த பிரச்சினை வந்தாலும், முதலில் உதவி செய்யும் நாடு இந்தியா தான் என்று கூறினார். இந்த பகுதியில் நிரந்தர அமைதி நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும், சவால்களை எதிர்கொள்ள  அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். புத்தரின் பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்டுள்ள இந்தியா நம்புவது அமைதியையே, போரை அல்ல என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையடுத்து இன்று போலந்து அதிபர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நாளை உக்ரைன் நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடன், அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். போலந்தில் இருந்து உக்ரைனுக்கு பிரதமர் மோடி ரயில் மூலம் செல்கிறார்.


 

Night
Day