புதின் வீட்டிற்கு சென்ற பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க மாஸ்கோ சென்ற பிரதமர் மோடியை, அதிபர் விளாடிமிர் புதின் கட்டித் தழுவி வரவேற்றார். முதல் கட்டமாக இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

22வது ஆண்டாக நடைபெறும் இந்தியா - ரஷ்யா இடையோன உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நேற்று மாஸ்கோ சென்றார். விமான நிலையத்தில் ரஷ்ய துணை பிரதமர், மோடியை வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் மூவர்ண கொடிகளை ஏந்தியபடி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். 

இதனை தொடர்ந்து மாஸ்கோவில் உள்ள ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற ரஷ்ய கலைஞர்களின் நடனம் மற்றும் ரஷ்யா வாழ் இந்தியர்களின் கலைநிகழ்ச்சிகளை மோடி ரசித்துப் பார்த்தார். 

இதையடுத்து நோவோ-ஓகாரியோவோவில் உள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை அதிபர் விளாடிமிர் புதின் கட்டித் தழுவி வரவேற்றார். 

இதைத் தொடர்ந்து அதிபர் இல்லத்தில் பிரதமர் மோடிக்கு புதின் விருந்தளித்தார். பின்னர், இரு தலைவர்களும் முதல் கட்டமாக தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய அதிபர் புதின், மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இது இந்திய நாட்டின் தலைவராக நீங்கள் பல ஆண்டுகளாக உழைத்ததன் பலன் எனக் குறிப்பிட்டார்.  இந்த சந்திப்பின்போது, பிரதமரின் கோரிக்கையை ஏற்று ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களை விடுவிக்க அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நோவோ-ஓகாரியோவோவில் தனக்கு விருந்தளித்த அதிபர் புதினுக்கு நன்றி எனக் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் நிச்சயம் இது நீண்ட தூரம் செல்லும் என்றும் இருவரது பேச்சுவார்த்தையை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே இன்று நடைபெறும் இரு நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி-அதிபர் புதின் பங்கேற்று அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பின்போது,  சுகாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Night
Day