கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 88. போப் பிரான்சிஸின் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இத்தாலியில் இருந்து அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகருக்கு இடம் பெயர்ந்த தம்பதியின் 5 குழந்தைகளில் ஒருவராக 1936 ஆம் ஆண்டு பிறந்தவர் போப் பிரான்சிஸ். ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு, pleurisy என்ற அழற்சியால் 20 வயதிலேயே நுரையீரலின் ஒருபகுதி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் தனது கல்வியை தொடர்ந்த ஹோர்கே, வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
உடல் நலப் பாதிப்பு தந்த வெற்றிடமும் இயேசு கிறிஸ்து மீதான ஈர்ப்பும், இயேசு சபையில் 1958 ஆம் ஆண்டு அவரை இணைய வைத்தது. யூனஸ் அயர்ஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிய ஹோர்கே, 2013 ஆம் ஆண்டு 16ஆது போப் பெனடிக்ட் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை அசிசியின் பிரான்சிசுவின் நினைவாக பிரான்சிஸ் என்பதை தனது ஆட்சி பெயராகவும் தெரிவு செய்தார்.
அனைவரும் சமம் என்ற சமூகநீதி கொள்கைகளை கொண்ட போப் பிரான்சிஸ், எச்.ஐ.வி. உள்ளிட்ட பாதிப்புகளால் ஒதுக்கி தள்ளப்பட்ட நோயாளிகள் மீது பரிவு காட்டி வந்தார். போரில்லாத அமைதியான உலகிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த போப் பிரான்சிஸ், உலகில் அடிமை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
இந்த சூழலில் நிமோனியா பாதிப்பால் ரோம் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் போப் பிரான்சிஸ் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தென் அமெரிக்காவிலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாக தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. போப்பின் மறைவுக்கு உலகத்தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.