மாஸ்கோவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் - 60க்கும் மேற்பட்டோர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள், துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் 60 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் ஹால் என்ற மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அந்த இசை நிகழ்ச்சிக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்தவர்களை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதுடன், வெடிகுண்டுகளையும் வீசியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத இசை நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள், தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்குமாக சிதறி ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெடிகுண்டு தாக்குதலால் குரோகஸ் மண்டபத்தில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்ததுடன், கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

தகவலறிந்து சென்ற பாதுகாப்பு படையினர், துப்பாக்சிக் சூடு தாக்குதலில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர். மேலும், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு ஏற்றிச் செல்வதற்காக 50-க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் குரோகஸ் ஹால் மண்டபத்தின் வெளிப்பகுதியில் அணி வகுத்து நின்றன. 

இசை நிகழ்ச்சிக்குள் புகுந்த 5 பேர் சுமார் 20 நிமிடங்கள் வரை துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு தாக்குதல்களை அரங்கேற்றியதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடும் பணியில் ரஷ்ய காவல்துறை தீவிரமாக களமிறங்கி உள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையே மாஸ்கோ தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதேபோல் மாஸ்கோவில் தீவிரவாத தாக்குதல் குறித்து ரஷ்யாவுக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவில் ஐ.எஸ். அமைப்பு துடிப்புடன் இருப்பதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. 

Night
Day