எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு தற்போது நடைபெற்று வரும் முதன்மை தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக சுயேச்சை வேட்பாளர் ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், போர்ட்டோ ரிகோவில் நடைபெற்ற முதன்மை தேர்தலில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக குறித்து ஊடகங்கள் தெரிவித்த நிலையில், ஆவணங்கள் இருந்ததால் வாக்கு எண்ணிக்கை சரி செய்யப்பட்டதாக கூறியிருந்தார். இது குறித்து தமது வலைதள பக்கத்தில் பதிவிட்ட எலான் மஸ்க், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்றும் மனிதர்கள் மற்றும் ஏஐ மூலம் ஹேக் செய்வதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாகவும் கூறியிருந்தார். எலான் மஸ்க் கூறியுள்ள கருத்துக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பது கறுப்பு பெட்டி என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறியுள்ள அவர், இந்திய தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத் தன்மை குறித்து தீவிர சந்தேகங்கள் எழுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், எலான் மஸ்க் மற்றும் ராகுல் காந்தியின் கருத்துக்களை மறுத்து பதிலடி கொடுத்துள்ள பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்டவை, பாதுகாப்பானவை என்று தெரிவித்தார். இதற்கும் பதிலளித்துள்ள எலான் மஸ்க் எதையும் ஹேக் செய்யலாம் என்று கூறி மீண்டும் பதிவிட்டுள்ளார்.