எழுத்தின் அளவு: அ+ அ- அ
வெளிநாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, ரஷ்யாவை சேர்ந்த சில ஊடகங்களுக்கு மெட்டா நிறுவனம் தடை விதித்துள்ளது. இது விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்காவில் அரசியல் பிளவுகளை ஏற்படுத்துவதற்காக ஊடக நிறுவவனத்திற்கு ரகசியமாக நிதி அளிக்க முயன்றதாக 'ரஷ்யா டுடே' நிறுவனம் மீது அமெரிக்கா நீதித்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் உளவுத்துறை அமைப்பின் முழு நேர உறுப்பினராக 'ரஷ்யா டுடே' செயல்படுவதாக குற்றம் சாட்டிய ஜோ பைடன் நிர்வாகம், அதன் மீது பல்வேறு தடைகளை விதித்தது. இந்நிலையில், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா கிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டா, ரஷ்யாவை சேர்ந்த 'ரஷ்யா டுடே', ரோஸியா செகோட்ன்யா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தங்களது செயலிகளில் இருந்து உலகம் முழுவதும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.