எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியா, ரஷ்யா இடையேயான உச்சி மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, ரஷ்யா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, மாஸ்கோவில் நடைபெறும் இரு நாடுகளுக்கு இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை மாஸ்கோ புறப்பட்டு சென்றார். மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் மோடியை, ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக் கொண்டார்.
இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், அதிபர் புடினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு நாளை செல்லும் பிரதமர் மோடி, 10ம் தேதி வரை அங்கு இருக்கிறார். இந்த பயணத்தின் போது அங்குள்ள தலைவர்களை மோடி சந்தித்து பேசுகிறார். கடந்த 41 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.