லெபனானில் பேஜர்கள் வெடித்து சிதறியதில் 9 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லெபனானில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்ததில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனர். 

லெபனான் நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகவும் துணைராணுவப் படையாகவும் ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், லெபனானின் ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த ஜூலை 30-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் புவாட் ஷூகர் உயிரிழந்தார். 

இதன்பிறகு, இஸ்ரேல் - லெபானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்த்து, அதற்கு பதிலாக தைவான் தயாரிப்பான பேஜரை தகவல் தொடர்பு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் லெபனான் முழுவதும் அதிகளவில் பயன்படுத்தப்படும் பேஜர்கள் செவ்வாய்கிழமை ஒரே நேரத்தில் தானாக சூடேறி, பின்னர் சரமாரியாக வெடித்து சிதற தொடங்கின. 

முக்கியமாக தெற்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள மருத்துவமனையில் பலர் வைத்திருந்த பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது. இதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்களும் தொடர்ச்சியாக வெடிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. பேஜர் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் மருத்துவர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 9 பேர் உயிரிழந்தனர். 

பேஜர் தாக்குதலில் லெபனான் நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் பலியான நிலையில், ஈரான் தூதர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து வரும்போது பல மருத்துவமனை வாயில்களில் ஆம்பூலன்ஸ் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்த காட்சிகள் இணையத்தை உலுக்கி வருகிறது. 

பேஜர்கள் வெடித்து சிதறியதில் படுகாயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

தாக்குதல் குறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜரில் லித்தியம் பேட்டரி உள்ளதாகவும், இவை அதிக சூடானால் வெடித்துச் சிதறும் தன்மையுடையது எனவும் கூறியுள்ளது. 

கடந்தாண்டு அக்டோபர் முதல் இஸ்ரேலுடன் போர் நடத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இச்சம்பவத்தை மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் என குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இஸ்ரேல் உளவுத் துறை, சைபர் தாக்குதல் மூலம் பேஜர்களின் பேட்டரிகளை அதிக சூடேற்றி வெடித்துச் சிதற செய்ததாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே லெபானின் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, பேஜர்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக அதனை வீசி எறியவும், அதனை பயன்படுத்த வேண்டாம் எனவும் லெபனான் அரசு அறிவித்துள்ளது.


Night
Day