எழுத்தின் அளவு: அ+ அ- அ
சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளால் தங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை
ஏற்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவதுடன் பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து வருகிறார். நிதி பற்றாக்குறையை சரி செய்ய வரி விதிப்பதை தவிர வேறு வழியில்லை என அதிபர் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில், அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் தங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சீனாவில் இருந்து பென்சில்களை வாங்குவதற்காக கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை இழக்க முடியாது என்று கூறியுள்ள ட்ரம்ப், இந்தப் பிரச்னையை தீர்க்க ஒரே வழி, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது மட்டுமே என தனது கருத்தை நியாயப்படுத்தி உள்ளார்.
அவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும் இவற்றை ஒரு அழகான விஷயமாக கருதுவதாக
ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். ஜோ பைடன் அதிபராக இருந்தபோது, அமெரிக்காவிற்கு அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். தாங்கள் அதை விரைவில் மாற்றப் போவதாகவும்
அமெரிக்காவிற்கான வரிகள் மிகவும் முக்கியமான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள் என்றும் அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.