விண்ணில் பாய்ந்தது PSLV-C 59 ராக்கெட்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்,  ஐரேப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் 2 செயற்கை கோள்களுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 

இஸ்ரோவின் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ப்ரோபா-3, 'கரோனா கிராப்' எனும் இரட்டை செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று மாலை 4.08க்கு மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் இரு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை 4.08 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய விருந்த நிலையில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுவதை இஸ்ரோ ஒத்தி வைத்தது. இதையடுத்து இன்று மாலை 4.04 மணிக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 550 கிலோ எடை கொண்ட 2 செயற்கை கோள்களை சுமந்தபடி பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகழ்ச்சியை வெளிப்படுத்தினர். விண்ணில் ஏவப்பட்ட இந்த இரு செயற்கைக் கோள்களும் பிஎஸ்எல்வி சி- 59 ராக்கெட் மூலம் பூமியில் இருந்து 60 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இரு செயற்கைக் கோள்களும் 150 மீட்டர் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் ஒளிவட்ட பாதையை ஆராய்ந்து தரவுகளை பூமிக்கு அனுப்பும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Night
Day