எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அந்நாட்டு அரசு இன்டர்போல் உதவியை நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் அரசு பணிகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட வன்முறையில் 753 பேர் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்நிலையில், மாணவர்கள் படுகொலைகளுக்கு எதிராக ஹசீனா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்க, இடைக்கால அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இன்டர்போல் மூலம் விரைவில் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் என வங்கதேச சட்ட விவகாரத்துறை ஆலோசகர் ஆசிஃப் நஸ்ரூல் தெரிவித்தார்.