ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச்சூடு - உலகத் தலைவர்கள் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது மர்ம நபர்  துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாக்கியாவில் பிரதமராக பதவி வகித்து வருபவர் ராபர்ட் பிகோ. அந்நாட்டின் 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அவர், நாட்டு மக்களிடையே பெரும் மதிப்புடையவர். இந்நிலையில் தலைநகர் பிராடிஸ்லாவா அருகேயுள்ள ஹண்ட்லோவா நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் ராபர்ட் பிகோ பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுவதற்காக சென்ற அவரை நோக்கி, கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்டார்.

இதில் 4 தோட்டாக்கள் பிரதமரின் வயிற்று பகுதியில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சரிந்தார். இதையடுத்து பிரதமரை உடனடியாக மீட்ட பாதுகாவலர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதற்கிடையே பிரதமர் ராபர்ட் பிகோவை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராபர்ட் பிகோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதனிடையே ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தி அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இவ்வாறான  கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் ராபர்ட் பிகே விரைவில் குணமடைய தான் வாழ்த்துவதாகவும், ஸ்லோவாக்கிய மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 



Night
Day