ஹேக் ஹசீனா ராஜினாமா - வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


வங்கதேசத்தில் வெடித்துள்ள வன்முறையின் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். பிரதமர் தப்பியோடியதை உறுதிப்படுத்திய ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்றும், இடைக்கால அரசை இராணுவம் அமைக்கும் என தெரிவித்தார். 

ROLL VISUAL

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் கடந்த மாதம் போராட்டம் நடைபெற்றது. மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா். 

இந்நிலையில் இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, வன்முறை படிப்படியாக குறைந்தது. இருப்பினும், அந்தப் போராட்டத்தின்போது மாணவா்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், ஹேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய கோரியும் மீண்டும் போராட்டம் வெடித்தது. இதில் போராட்டக்காரா்கள் மற்றும் காவல்துறையினா் இடையே ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 
 

மேலும் மாணவர்கள் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை அறிவித்துள்ளதால், பதற்றம் இக்கட்டான சூழலை எட்டியது. சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல்நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தாக்கியதாகவும், இதில் 13 காவல் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர். வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களை கலைக்க காவலர்கள் கண்ணீர் புகை குண்டு, ரப்பர் தோட்டாக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினர். போராட்டம் வன்முறையாக மாறியதால் வங்கதேசமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. 

வங்கதேசத்தில் போராட்டக்காரர்களின் வன்முறை வெறியாட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியதாக தகவல்கள் வெளியாகின. நிமிடத்திற்கு நிமிடம் நிலைமை மோசமடைவதை உணர்ந்த அவர், அவரது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் நாட்டை விட்டு வெளியேறினார். தலைநகர் டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெளியேறினார். மேலும் அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவை நோக்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் வங்கதேச நிலைமை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், நாட்டின் இடைக்கால அரசை இராணுவம் அமைத்துள்ளதாக தெரிவித்தார்.  மேலும் வன்முறையை விடுத்து மாணவர்கள் அமைதி காக்க வேண்டுமென்றும் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரீசலிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனிடையே போராட்டக்காரர்களால் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபூர் ரகுமானின் சிலையை போராட்டர்காரர்க உடைத்து சேதப்படுத்தினர். 
இந்நிலையில் தொடர்ந்து வங்கதேசத்தில் பரவும் வன்முறை காரணமாக இந்திய எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனிடையே வங்கதேசத்தையே உலுக்கியுள்ள மாணவர் போராட்டத்தின் உச்சக்கட்டமாக, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்லும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன. மேலும் பிரதமர் இல்லத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடியதோடு சிலர் நாற்காலிகள், சோஃபா போன்றவற்றை எடுத்துச் சென்றனர். மேலும் பிரதமர் இல்லத்தில் உள்ள படுக்கைகளில் படுத்தும் போராட்டக்காரர்கள் சிலர் ஓய்வு எடுத்தனர். 

இதனிடையே வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா தப்பிச்சென்ற நிலையில், நாட்டின் இடைக்கால் அரசின் பிரதமராக சலிமுலா கான் செயல்படுவார் என அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கதேசத்தில் பதற்றம் இருந்து வரும் சூழலில் இந்தியாவிலிருந்து வங்கதேசம் செல்லும் அனைத்து விதமான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. மேலும் தலைநகர் டாக்காவில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

 
 

Night
Day