எழுத்தின் அளவு: அ+ அ- அ
9 மாதங்களுக்குப் பிறகு இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார்.
2024 ஆம் ஆண்டு ஜூன் 25ல் அமெரிக்காவின் போயிங் ஸ்டார்லைனர் ஸ்பேஸ் கிராஃப்டின் மூலமாக விண்வெளிக்கு அனுப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் உட்பட விண்வெளி வீரர்கள் 8 நாட்களில் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 9 மாதங்கள் விண்வெளியிலேயே சிக்கி தவித்தனர். இந்நிலையில் அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம், விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் பூமிக்கு புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 17 மணி நேர பயணத்துக்குப்பின் இன்று அதிகாலை 3.30 மணியளவில் புளோரிடா கடலில் இறங்கியது.
டிராகன் விண்கலம் கடலில் இறங்கியதும், அதனை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் குழுவினர் கப்பல் மற்றும் படகுகளில் விரைந்தனர். மீட்பு பணிக்கு இடையே கடலில் மிதந்த கேப்சூலை நான்கிற்கும் அதிகமான டால்ஃபின்கள் வட்டமிட்ட காட்சி பிரம்மிக்க வைத்தது.
அதனை தொடர்ந்து விண்கலத்தை கயிறு மூலம் இழுத்துச் சென்ற மீட்புக்குழுவினர், அதனை கப்பலில் ஏற்றினர். வெப்பம் தணியும் வரை காத்திருந்து அதன்பின்னர் கேப்சூலின் கதவை திறந்த மீட்புக்குழுவினர், வீரர்களை மீட்க துவங்கினர். விண்கலத்திலிருந்து முதலில் நிக் ஹேக் வெளியே அழைத்து வரப்பட்டார். அதனை தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு ஸ்டெச்சரில் வைத்து அழைத்து செல்லப்பட்டனர். பூமியின் காற்றை 9 மாதங்களுக்கு பிறகு சுவாசித்த சுனிதா வில்லியம்ஸ் மீட்புக்குழுவினரை கண்டு உற்சாகமாக கையசைத்தார்.
குறிப்பாக டிராகன் விண்கலனில் இருந்து வெளியேறிய சுனிதா வில்லியம்ஸ், உற்சாகத்துடன் கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
விண்வெளி வீரர்கள் 45 நாள் மறுவாழ்வு சிகிச்சைக்காக ஹூஸ்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளனர்.
இதனிடையே சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் குறித்து பேட்டியளித்த நாசா செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மேலாளர் பில் ஸ்பெட்ச், இதற்கு முன்பாக மூன்று விண்வெளி வீரர்கள் 117 நாட்கள் விண்வெளியில் கழித்த நிலையில், தற்போது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 286 நாட்கள் விண்வெளியில் கழித்துள்ளனர். ஹேக் மற்றும் புட்ச் வில்மோர் தலா ஒரு விண்வெளி நடைப்பயணம் நடத்திய நிலையில், சுனிதா இரண்டு விண்வெளி நடைப்பயணம் மேற்கொண்டார். இவரே விண்வெளியில் அதிகநேரம் நடைபயணம் மேற்கொண்ட பெண்ணாக இருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக நான்காவது வீரராக சுனிதா இருப்பதாகவும் கூறினார்.
இதனிடையே பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்சை வரவேற்கும் விதமாக, அவரது சொந்த கிராமமான ஜூலாசனில் மக்கள் ஆரத்தி எடுத்தனர். மேலும் பட்டாசுகளை வெடித்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.