எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஏரியாவில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்கிற போட்டியில் 27 வயது இளைஞரை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்த சம்பவம், ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திகிலூட்டும் சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆரணிப்பாளையத்தை சேர்ந்த அருணகிரி மகன் விக்னேஷ். 27 வயது இளைஞரான இவர் ஏசி பழுதுபார்க்கும் வேலையை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும் லியா ஸ்ரீ என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். விக்னேஷ்-க்கும், அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கணேஷ்-க்கும் இடையே, இந்த ஏரியாவில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்கிற மோதல் பல மாதங்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் 18ம் தேதி அன்று ஆரணிப்பாளையம் அருகே புதுக்காமூர் பகுதியில் கணேஷ் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த விக்னேஷை வழிமறித்து வம்புக்கு இழுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கஞ்சா மற்றும் மதுபோதையில் இருந்த கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள், சரமாரியாக கத்தியால் தாக்கி படுகொலை செய்து விக்னேஷை சாலையோர பள்ளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி டிஎஸ்பி பாண்டிஸ்வரி தலைமையிலான போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த விக்னேஷ் சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஏடிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், 9 பேர் கொண்ட கும்பலே இந்த கொலையை செய்தது தெரியவந்தது. விக்னேஷ் - கணேஷ் இடையே உள்ள முன்விரோதம் மட்டுமே இந்த கொலைக்கு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்றும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த கொலைசம்பவம் தொடர்பாக, ஆரணிப்பாளையத்தை சேர்ந்த கணேஷ் தம்பி ரமேஷ், தனபால், பிரசாந்த், அசோக், கமல், தாமு, தினேஷ், சந்தோஷ் என 8 பேரையும் மார்ச் 18-ம் தேதி செவ்வாய்கிழமை அன்று தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் கணேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏரியாவில் யார் டான் எனும் போட்டியில் இளைஞர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் விக்னேஷின் மனைவி மற்றும் அவரது ஒன்றரை வயது குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.