எழுத்தின் அளவு: அ+ அ- அ
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் காயமடைந்த இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால், அங்கு வெடிவிபத்துகள் நிகழ்வதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் அவ்வப்போது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த மாதம் 29ம் தேதி, சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்து 4 பேர் உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள்ளாகவே, காளையார் குறிச்சியில் மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
காளையார்குறிச்சியில் செயல்படும் சுப்ரீம் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி மாரியப்பன் மற்றும் முத்து வேல் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த சரோஜா, சங்கரவேல் ஆகிய இருவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சடலங்களை மீட்டு பிரோத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆலையின் போர்மேன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளர் மற்றும் மேலாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, வெடிவிபத்து நடந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.