அசைவ பிரியர்களுக்கு ஷாக்... இறைச்சிக்காக பிடிக்கப்படுகிறதா பூனைகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் சாலைகளில் சுற்றித் தெரியும் நாய்கள் மற்றும் பூனைகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பிடித்து சென்று இறைச்சிக்காக விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகாரளித்துள்ளது குறித்து சற்று விரிவாக காணலாம்...

பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளை பிடித்து சாக்கு மூட்டைகளில் அடைத்து வைத்துள்ள அதிர்ச்சியளிக்கும் காட்சிகள் தான் இவை...

சென்னை கீழ்ப்பாக்கம் குளக்கரை சாலை உட்பட பல்வேறு தெருக்களில் சுற்றித் திரிந்த பூனைகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் பிடித்து சாக்கு மூட்டைகளில் எடுத்துச் சென்றுள்ளனர். 

இதனை கண்ட விலங்குகள் நல ஆர்வலர் ஜோஸ்வா, பூனைகளைப் பிடித்து சென்ற நபர்களை கையும் களவுமாக பிடித்து கொடுத்தும், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

பூனைகளை பிடித்து சென்று இறைச்சிக்காக பயன்படுத்தி வருவதாகவும், நள்ளிரவில் பூனைகளை திருடிய நபர்களை பிடித்த போது, ஒரு பூனைக்கு 100 ரூபாய் கொடுத்தால் பூனைகளை விட்டு விடுவதாகவும், காவல்துறையினர் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்ததாகவும், விலங்குகள் நல ஆர்வலர் ஜோஸ்வா குற்றம்சாட்டியுள்ளார்.

மர்ம நபர்கள் பூனைகள் மற்றும் நாய்களை பிடிப்பதற்கு ஆயுதங்களைக் கொண்டு வருவதாகவும், நள்ளிரவு நேரங்களை பயன்படுத்தி சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் பூனை நாய்களை திருடி அதனை சாக்குப் பைகளில் போட்டு விற்பனை செய்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

வாயில்லா ஜீவன்களை பிடித்து இறைச்சி கடைகளில் விற்பனை செய்து வருவதாகவும் இதை கால்நடைத்துறை மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜோஸ்வா கேட்டுக்கொண்டார்.

ப்ளூ கிராஸ் மற்றும் கால்நடை துறையில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் விலங்கு நல ஆர்வலர் ஜோஸ்வா, பூனைகளை இறைச்சிக்காக பிடித்து செல்வது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

சட்டவிரோதமாக இரவு நேரங்களில் பூனைகளை பிடிப்பவர்களை துரத்தி சென்றபோது, இளைஞர்கள் சிலர் சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்வதையும் கண்டதாகவும், சென்னையில் அதிகரிக்கும் வாகன திருட்டை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜோஸ்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே நிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் பூனை மற்றும் நாய்களை படங்களில் மட்டுமே காண முடியும் என வேதனை தெரிவித்தார்.

பூனை மற்றும் நாய்கள் பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கால்நடை துறையினர் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விலங்குகள் நல ஆர்வலர் ஜோஸ்வா கேட்டுக் கொண்டார்.

varient
Night
Day