அடைத்து வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் போக்சோவில் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தனி அறையில் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வசித்து வரும் பெண் ஒருவர் கடந்த 12-ஆம் தேதி இரவு ரப்பர் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது 8-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்களும், இரவில் ஊர் சுற்றி பார்ப்பதற்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற நிலையில் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் தனது பெண்களை காணவில்லை என அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சுங்கான்கடை பகுதியில் மாணவிகள் இருவரும் இளைஞர் ஒருவருடன் பைக்கில் இருந்து இறங்கி தேநீர் அருந்தி விட்டு மீண்டும் பைக்கில் ஏறி செல்வது தெரிந்தது. 

இதுகுறித்து விசாரணை நடத்தியதில், தக்கலை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார், மாணவிகளை மிரட்டி அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தங்கையை தனி அறையில் அடைத்து வைத்துவிட்டு அக்காவுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற அஜித்குமார், சுங்கான்கடை பகுதியில் தேநீர், ஐஸ்கிரீம் வாங்கி தந்து சமாதானப்படுத்தி மதுரை பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் மாணவிகளின் செல்போன் சிக்னலை வைத்து அவர்களை மீட்ட போலீசார், பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்கை மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இதையடுத்து  மார்த்தாண்டம் மகளிர் போலீசார் வழக்கறிஞர் அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day