அண்ணாமலை பல்கலை. போலி சான்றிதழ் விவகாரம் - விஸ்வரூபம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணாமலை பல்கலைகழக சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் வயல்வெளிகளில் இருந்த போலி சான்றிதழ்களை பறிமுதல் செய்துள்ளனர். போலி சான்றிதழ் விவகாரத்தில் பல்கலை கழக ஊழியர்களிடம் நடைபெற்று வரும் விசாரணை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தில், அண்ணாமலைப் பல்கலைகழக சான்றிதழ்கள் சிதறி கிடந்துள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற பல்கலைக் கழக பணியாளர்கள், அந்த சான்றிதழ்களை எடுத்து சென்று ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் போலி சான்றிதழ் என தெரியவந்தது. 

இதுதொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் பிரபாகர், கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதன்முடிவில், சிதம்பரம் மன்மதசாமி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் மற்றும் கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த நாகப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவரது வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள், பெயர் எழுதப்படாத சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள், அதனை தயாரிக்க பயன்படுத்திய லேப்டாப், பிரிண்டர், போலி முத்திரை, போலி அடையாள அட்டைகள், செல்போன் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டது.

இந்த ஆவணங்களை ஆய்வு செய்த கடலூர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார், முதன் முதலாக சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி  கிராமத்தில் வாய்க்காலில் போலி சான்றிதழ் கிடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சான்றிதழ் கிடந்த வாய்க்காலின் எதிர்ப்புறம் உள்ள வயல்வெளி பகுதியில் ஆய்வு செய்தபோது அங்கு சிதறிக்கிடந்த மேலும் சில போலி சான்றிதழ்களை பாலமுருகன் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு சென்ற சிபிசிஐடி போலீசார், முதன் முதலாக கோவிலாம்பூண்டி கிராமத்தில் சான்றிதழ்களை கண்டெடுத்த பல்கலைக் கழக ஊழியர்களிடமும், புகார் அளித்த பல்கலைக்கழக அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக போலி சான்றிதழ் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலி சான்றிதழ் விவகாரத்தில் பல்கலைக் கழகத்தை சேர்ந்த வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா? - போலி சான்றிதழால் ஆதாயம் பெற்ற மாணவர்கள் யார்? யார்? - வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விசாரணையின் முடிவில்தான் விடைகிடைக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Night
Day