எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆடு மற்றும் கோழி வேலி தாண்டி சென்றதாக பக்கத்துவீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் வயதான தம்பதியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி அருகே ஊஞ்சப்பாளையம் சாலை, பெரிய தோட்டத்தை சேர்ந்த தம்பதி பழனிசாமி மற்றும் பர்வதம். இவர்களின் மகன் மற்றும் இருமகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். தோட்டத்து வீட்டில் வயதான தம்பதியர் மட்டுமே தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் பழனிச்சாமி மற்றும் பர்வதம் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஆடு மற்றும் கோழிகள் வேலி தாண்டி செல்வதில் பக்கத்து தோட்டத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும் பழனிசாமிக்கும் இடையே பல மாதங்களாக பிரச்னை இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் நேற்றும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக, பழனிசாமி மற்றும் பர்வதத்தை அரிவாளால் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டிவிட்டு, ரமேஷ் தப்பியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த வயதான தம்பதியர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து ரமேஷை கைது செய்த போலீசார், கொலையில் வேறு நபர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
கைரேகை மற்றும் தடையவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேற்கு மண்டல IG செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.