ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர் சுட்டுக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சென்னை மாதவரத்தில் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பலின் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் 11 பேரையும் 5  நாட்கள் போலீஸ் காவலில்  எடுத்து செம்பியம் போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 11 பேரை போலீசார் தனித்தனியாக கஸ்டடியில் எடுத்த விசாரணை நடத்தி வருவதோடு, அவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்திற்கும் அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், ரவுடி திருவேங்கடம் மாதவரத்தில் உள்ள வெஜிடேரியன் பகுதியில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக விசாரணையில் கூறியுள்ளார். இதையடுத்து, திருவேங்கடத்தை போலீசார் இன்று சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, பாதுகாப்பிற்காக ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டர் செய்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் என்கவுண்டர் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆட்டோ எடுத்து ஒரு வாரமாக வேவு பார்த்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை, போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடமும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day