ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் இன்று என்கவுண்டர் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்‍கில் திருவேங்கடத்தை தொடர்ந்து நடைபெற்ற 2வது என்கவுன்டர் இதுவாகும்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திரா மாநிலம் கடப்பாவில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். 

இந்நிலையில் நீலாங்கரை அடுத்த அக்கரை அருகேயுள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்ற ரவுடி சீசிங் ராஜா அழைத்து செல்லப்பட்டார். அப்போது பதுக்கி வைத்திருந்த கள்ளதுப்பாக்கியை கொண்டு போலீசாரை நோக்கி ரவுடி சீசிங் ராஜா இரண்டு முறை சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி தற்காப்புக்காக ஆய்வாளர் விமல் இரண்டு முறை சுட்டதில் ரவுடி சீசிங் ராஜாவின் மார்பு மற்றும்  மேல்வயிறு பகுதிகளில் தோட்டா பாய்ந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சீசிங் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்ட இரண்டாவது குற்றவாளி சீசிங் ராஜா என்பதும், கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் நடத்தப்பட்ட இரண்டாவது என்கவுண்டர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீலாங்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் எனவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Night
Day