எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி வழக்கில், தற்போது 400 ஏஜென்ட்களின் 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
2 ஆயிரத்து 438கோடி ரூபாய் மோசடி தொடர்பாக ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து இதுவரை 23 பேரை கைது செய்தனர். மேலும் அந்நிறுவனத்தின் இயக்குனர் ராஜசேகரை எம்.லாட் ஒப்பந்தத்தின் படி துபாயில் வைத்து அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வரும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க பொதுமக்கள் முதலீடு செய்த மூன்றில் ஒரு பங்கு பணம் ஏஜெண்டுகளிடம் இருப்பதால் அவர்களிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் 7 ஆயிரம் ஏஜெண்டுகளை கண்டறிந்து, அதில் பொதுமக்களை ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்யவைத்த 500 ஏஜெண்டுகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களில் 400 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்து, அவர்கள் கமிஷனாக பெற்ற 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். மேலும் ஏஜெண்டுகளின் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.