எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை மாவட்டத்தில் பொய் வழக்கு பதிவு செய்து வரும் காவல்துறையால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு அடுத்தடுத்து இணையதளம் மூலமாக முதலமைச்சர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் புகார் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை தொடர்ந்து விவசாயி ஒருவர் வீடியோ வெளியிட்டிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் நாள் தவறாமல் நடக்கும் கொலை சம்பவங்களால் மக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர். அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய் கிடக்கிறது. தங்களுக்கு கொலை மிரட்டல் உள்ளது, பாதுகாப்பு கொடுங்கள் என கேட்டு மக்கள் கெஞ்சினாலும் கூட விளம்பர முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் அலட்சியத்தால் உயிர்கள் காவு வாங்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
இதற்கு நெல்லை மாவட்டத்தில் அண்மையில் நடந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாகீர் உசேன் பிஜிலி படுகொலை சம்பவமே உதாரணமாக உள்ளது. அவர் வெட்டிகொலை செய்யப்படுவதற்கு முன் பலரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு புகாரை வீடியோவாக அனுப்பியிருந்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவருடைய புகார் உதாசீனப்படுத்தப்பட்டதால் அவர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள், நெல்லை மாவட்டத்தில் விவசாயி ஒருவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு இணையதளம் மூலமாக வீடியோவில் புகார் அனுப்பியுள்ளார். பேட்டை அருகே உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜகுரு என்பவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மற்றும் அவருடைய தம்பிக்கும், தனக்கும் இடையே முன்பகை இருந்து வருவதாகவும், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் இவர்களுக்கு சுத்தமல்லி காவல்நிலைய ஆய்வாளர் உடந்தையாக இருந்து வருவதாகவும் வீடியோவில் ராஜகுரு குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமான தன் மீது வன்கொடுமை வழக்கை பொய்யாக பதிவு செய்து சிறைக்கு அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அந்த வழக்கறிஞரும், அவருடைய சகோதரரும் மற்றும் சுத்தமல்லி ஆய்வாளருமே முழு பொறுப்பு என்றும் ராஜகுரு வீடியோவில் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் ராஜகுரு.
ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீடியோ வெளியிட்ட சம்பவத்தை தொடர்ந்து தற்போது விவசாயி ஒருவர் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக நெல்லை காவல் கண்காணிப்பாளருக்கு வீடியோ அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.