எழுத்தின் அளவு: அ+ அ- அ
பெரம்பலூர் அருகே மூன்று பெண்களை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னனை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்றாவது மனைவியின் திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால், சிக்கிய ஆக்டிவ் டிரைவர் குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ரெங்களாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர் பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் காதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த தினேஷ் சென்னையில் வாடகை கார் ஓட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஏற்கனவே திருமணமான வள்ளி என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட, முதல் மனைவிக்கு தெரியாமல் அவரையும் திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சென்னையிலிருந்து பெரம்பலூர் வந்த தினேஷ் மினி பேருந்து ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் கல்பாடி கிராமத்தை சேர்ந்த ரம்யா என்ற முதுகலை மைக்ரோ பயலாஜி பட்டதாரி பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.
அந்த திருமண போட்டோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து மை பொண்டாட்டி ஐ லவ் யூடி செல்லம் என தினேஷ் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த முதல் மனைவியான சௌந்தர்யா, தினேஷை தொடர்பு கொண்டு போலீஸாரிடம் புகார் செய்யப் போவதாக கூறியுள்ளார். இதனால் பயந்து போன தினேஷ் செல்போன் தொடர்பை துண்டித்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து ரம்யாவை தேடிச் சென்ற சௌந்தர்யா, தினேஷ் இருக்குமிடம் கேட்டறிந்துள்ளார். பின்னர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினேஷின் மோசடி மற்றும் விவாகரத்து கேட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார் எனப் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் தினேஷை பிடித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், அவர் மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது திருமணம் செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இது போன்ற ஏமாற்று பேர்வழிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.