கந்துவட்டி கொடுமையின் உச்சம்... சொத்துகளை மீட்க உதவுமாறு கோரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

8 லட்ச ரூபாய் கடனுக்கு 1 கோடி வரை வட்டி மட்டுமே கட்டிய நிலையில், மீதி தொகையை கேட்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கந்துவட்டி கும்பலுக்கு காவல்துறையும், திமுக நிர்வாகியும், ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர், அவரது தந்தை பாண்டியனுடன் இணைந்து அதே பகுதியில் சிறிய அளவிலான பனியன் கம்பெனி வைத்துள்ளனர். இந்நிலையில் தொழில் விரிவாக்கத்திற்காக கடந்த 2015-ம் ஆண்டு சிவன்மலை குருக்கத்தியை சேர்ந்த கஜேந்திரன் என்பவரிடம் 8 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் சில மாதம் தவணை செலுத்திய பின் 5 லட்சம் ரூபாயை செல்வராஜ் ரொக்கமாக செலுத்தியதாக தெரிகிறது. 

ஆனால் அப்பணம் வட்டியில் கழிக்கப்பட்டதாகவும், அசல் தொகை இன்னும் அப்படியே உள்ளதாகவும் வட்டி பணத்தை கேட்டு கஜேந்திரன் மிரட்டுவதாக செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், 70 லட்சம் மதிப்புள்ள 6 சென்ட் நிலம் மற்றும் 5 சென்ட் நிலங்களை கஜேந்திரன் மிரட்டி கிரையம் செய்து கொண்டதாகவும், இன்னும் வட்டி மற்றும் அசல் 30 லட்சம் ரூபாய் இருப்பதாக கூறி அடியாட்களுடன் மிரட்டி வந்ததாக கூறுகிறார் பாதிக்கப்பட்ட செல்வராஜ். 

மன உளைச்சலுக்குள்ளான தந்தை பாண்டியன் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு தற்போது ஒரு கால்கள் அகற்றப்பட்ட நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட செல்வராஜ் தெரிவித்தார். 

ஒரு கட்டத்தில் ராக்கெட் வட்டியை தாக்குபிடிக்க முடியாத செல்வராஜ் மற்றும் பாதிக்கப்பட்ட பலரும் கந்து வட்டி கொடுமை குறித்தும், அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு தர கோரி காங்கேயம் டிஎஸ்பியிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். ஆனால், கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக காங்கேயம் காவல் துறையினர் மற்றும் சிவன்மலை ஊராட்சியின் திமுகவை சேர்ந்த துணை தலைவர் சண்முகம் என்பவரும் செயல்படுவதாக குற்றம்சாட்டிய பாதிக்கப்பட்டவர்கள் கோவை சரக டிஐஜியிடம் புகார் அளித்தனர்.

கந்து வட்டியை மிஞ்சும் வகையில் ராக்கெட் வட்டி வசூல் செய்து மிரட்டல் விடுக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது. 
 

Night
Day