கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் கைதான 7 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட விஷச்சாரயத்தை அருந்தியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்ற முக்கிய குற்றவாளியான சின்னதுரை உட்பட 14 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, சிபிசிஐடி போலீசார், கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் மெத்தனால் விற்பனை செய்யும் நபர்கள் உள்ளிட்டோரை கண்காணித்து தீவிர கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, சென்னையில் மெத்தனால் விற்பனை செய்ததாக கூறி சிவக்குமார், பென்சிலால், கௌதம், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை ஆகிய 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இந்நிலையில், 7 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவில் வைக்க நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார்.